திண்டுக்கல் மாவட்டப் பறவைகள்
எனது சொந்த மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலை எழுந்தவுடன் பறவைகள் பார்ப்பதை தொடர் வழக்கமாக வைத்திருக்கிறேன். உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சியின் போதும் அடிக்கடி குடும்பத்தோடு கோயிலுக்குச் செல்லும் போதும், அவ்வப்போது நண்பர்களோடு செல்லும் உற்சாகப் பயணத்தின் போதும் கூட, என் கண்கள் ஒரு பறவையைக் காணவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். என் காதுகளுக்கு எந்தத் தடையும் இருக்காது. பறவைகளின் குரலொலிகள் கேட்டு அது இன்னின்ன பறவைகள் என்று மூளைக்கு கடத்திக் கொண்டிருக்கும். இவ்வளவு ஏன் பணி சார்ந்து எங்கெல்லாம் காத்திருக்க நேர்கிறதோ அங்கெல்லாம் கிடைக்கிற கண நேரத்தில் பறவைகளை அவதானிக்கத் தொடங்கி விடுவேன். இப்படி ஓய்விலும் தவறாது பறவையைக் காணும் மனநிலையையெல்லாம் எந்தக் கவிஞனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒன்று.
திண்டுக்கல் என்றால் பூட்டும் தோல்ச் சாலைகளும் நினைவுக்கு வரும். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு கொடைக்கானலும் சிறுமலையும் தான் நினைவுக்கு வருகிறது. காரணம் வறட்சி மாவட்டமாக காலங்காலமாக வகைப்படுத்தப்பட்டிருந்த திண்டுக்கல் இன்று சமூக ஊடகங்கள் வாயிலாக பசுமையும் குளிர்ச்சியுமான மாவட்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கொடைக்கானல் எனும் மேற்கு மலைத் தொடரையும் சிறுமலை எனும் கிழக்குக் குன்றையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் திண்டுக்கல் எப்போதும் புவியியல் அமைப்புப்படி வறண்ட பிரதேசம்தான். அதனால்தான் திண்டுக்கல் மக்கள் இன்றும் குடிநீருக்காக காவிரி ஆற்றையே நம்பி உள்ளார்கள்.
இப்படியான பிரதேசத்தில் நான் எப்படி இயற்கையோடும் பறவைகளோடும் நேசம் கொண்டு அலைகிறேன். தமிழ்நாட்டின் ஐவகை நிலங்கள் எப்படி நிலத்தால் வேறுபட்டுள்ளதோ அங்கு வாழும் மக்கள் எப்படி தங்களின் தனித்ததொரு திறனால் வேறுபட்டுள்ளனரோ அப்படியே அந்தந்த நிலத்திற்கேயுரிய பல்லுயிர்களும் அங்கு வேறுபட்டு வாழ்கின்றன.
புற்கள் தேங்கித் தேங்கி வளரும் பாலையும், ஒரே மழையில் புற்கள் செழித்தோங்கும் முல்லையும், எப்போதும் குளிர்ந்து போய் இருக்கும் குறிஞ்சியும், பசிப்போக்க ஏர் உழும் மருதமும், அந்நிலங்கள் அளித்த கொடைகளான ஓடைகள், குளங்கள், ஆறுகள் ஆகிவற்றில் வாழும் பல்வேறு உயிரினங்கள் ஒவ்வொன்றும் இயற்கையின் கூறுகளாகப் பரிணமித்தன. வெயில், மழை, குளிர், காற்று, அதனால் உண்டாகும் வியர்வையும் அலுப்பும் கூட இயற்கையின் கூறாகவே எனக்குத் தெரிந்தது. வேறென்ன வேண்டும் இயற்கையோடு நான் ஒன்றிப் போக?
முன்பு நான் வேலை பார்த்த நிறுவனத்தில், மலை அடிவாரம் தொடங்கி ஊர் எல்லை வரைக்கும் உள்ள நிலங்களில் மழைநீரைச் சேகரிக்கும் உத்திகளைச் செயல்படுத்துவதே எங்கள் முக்கியப் பணியாக இருந்தது. இந்தக் களப்பணியில் அதிகமான பறவைகளை காணும் பொன்னான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்பணியில் என்னிடம் கூடுதல் உழைப்பு வேண்டிக் கேட்டாலும் சலிக்காமல் செய்வேன். காரணம் ஒவ்வொரு கூடுதல் வேலைக்கும் கூடுதலாக ஒரு பறவையை என்னால் பார்க்க முடியும். விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், தற்காலிக விடுப்பு நாட்களில் கூட பறவைகள் பார்க்க கிளம்பிவிடுவேன். இப்படியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களுக்கும் சென்று, பறவைகள் பார்த்து பட்டியல் தயார் செய்து ebird எனும் ஆய்வுத்தளத்தில் பதிவேற்றுவேன். இதுவரை 2000 க்கும் மேற்பட்ட பறவைப் பட்டியல்கள் சமர்ப்பித்தும் 266 பறவை இனங்களை கண்டறிந்தும் உள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டப் பறவைகள் வரலாற்றில் இவ்வளவு காத்திரமான பங்களிப்பை அளித்திருந்தாலும், முழுமையான பறவைகள் வரலாறாக அது இருக்க முடியுமா? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. நான் பயணம் செய்த இடங்களோ அதிகமான பறவைகள் காணப்படும் இடங்களுக்குத்தானே. நான் போகாத இடங்களிலும் பறவைகள் இருக்கத்தானே செய்யும். அதையெல்லாம் ஆவணப்படுத்துவது யார்? அந்த நிலங்களெல்லாம் இயற்கையின் கூறுகள் இல்லையா? அதையும் பூர்த்தி செய்தால்தானே முழுமையான பறவைகள் வரலாறாக இருக்க முடியும். என் மனம் குற்ற உணர்வு அடையத் துவங்கிவிட்டது.
வெயில் காயும் இடங்கள், கரடு முரடான குன்றுகள், மனிதக் காலடி படாத இடங்கள், இயற்கை ஆர்வலர்கள் யாரும் புழங்காத இடங்கள், ஏன் பறவை ஆர்வலர்களே செல்லாத இடங்கள் என திண்டுக்கல் மாவட்டத்தில் பறவைப் பதிவுகளே இல்லாத இடங்கள் எதுவென்று தேடத் தூங்கினேன். ebird மற்றும் www.uyiri.wordpress.com ஆய்வுத்தளத்தில் அதற்கான முழுமையான விவரங்கள் கிடைத்தது. அதை குறித்து வைத்துக் கொண்டு திட்டமிடத் துவங்கினேன்.
5 சதுரகிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு கட்டம் என்று திண்டுக்கல் மாவட்டத்தைப் பிரித்தால் 310 சதுர கட்டங்கள் வருகிறது. கடந்த 10 வருடங்களாக 2000 பறவைப் பட்டியல்களுக்கு மேல் சமர்பித்தும் இன்னும் விட்ட குறையாக தொடாத குறையாக 153 கட்டங்கள் பறவைகள் பார்க்காத இடங்களாக விடுபட்டுப் போயிருக்கின்றன.
ஒரு கட்டத்தை முழுவதும் பூர்த்தி செய்யும் விதமாக 4 பறவைப் பட்டியல்கள் பதிவு செய்தால் 2 மணி நேரம் ஆகும். நாள் ஒன்றுக்கு 3 கட்டங்கள் வீதம் கணக்கிட்டு பயணம் செய்தால் 244 மணிநேரங்களும் தோராயமாக 3000 கிலோமீட்டர்களும் வருகின்றன. இந்த இடங்களையும் பறவைகள் பார்த்து இட்டு நிரப்பி விட்டால் திண்டுக்கல் மாவட்டத்தில் பறவைகளுக்காக என் கால் தடம் படாத இடங்கள் எதுவும் இல்லை என்றாகிவிடும்.
அப்போதுதான் தெரிந்தது என் வீட்டுக்கு அருகிலே சென்று கூட நான் பறவைகள் பார்க்காதது பற்றி. மேலும் எனக்கு குற்ற உணர்வு துளிர்விடத் தொடங்கியது. இந்த லட்சணத்தில் நான் எப்படி திண்டுக்கல் மாவட்டப் பறவைகள் வரலாற்றை எழுத முடியும்? பறவைகள் வரலாறு என்பது வெறும் பறவைகள் பார்த்தல் மட்டுமா? எனும் கேள்விகள் என்னை மேலும் துளைக்க ஆரம்பித்தது.
இந்தப் பயணம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடத்தை எனக்கு கற்றுத் தந்தது. என் வீட்டின் அருகே தென்பட்ட ஒன்றிரண்டு பெரிய தவிட்டுக் குருவிகள் வறண்ட நிலத்தில் கூட்டம் கூட்டமாகத் திரிந்தன. அதுவரை மலைப் பகுதியில் மட்டுமே பார்த்து வந்த பழுப்பு நிற ஈப்பிடிப்பான், கருங்கழுகு, செந்தலை மரங்கொத்தி போன்ற பறவைகளை முதன்முறையாக சமவெளியில் பார்த்தது ஆச்சர்யப்பட வைத்தது. மேலும் மலைப் பகுதியில் மட்டுமே காணப்பட்ட பல்வேறு வகையானப் பறவைகளை மலை அடிவாரத்திலும் பதிவு செய்தேன். அவற்றுள் குட்டைக் கிளி, செந்தலைப் பஞ்சுருட்டான், காட்டு மைனா போன்றவை முக்கியமானவை. மனிதர்கள் பயத்தோடு அணுகும் கிராமக் கோயில் காடுகளில் பறவைகளின் அடர்த்தி மிகுந்திருந்தது. தோட்டக் கள்ளன், காட்டு வாலாட்டி, வேதிவால் குருவிகளை அங்கு காண முடிந்தது. முல்லை திரிந்த பாலை நிலத்தில் மணல் கவுதாரி, இந்தியப் புள்ளிக் கழுகு, rofous tailed lark போன்ற பறவைகளைக் கண்டேன். கடலுக்கு அருகே வாழும், கடற்கரைக் கொக்கு, பழுப்புத் தலை கடற்காகம் போன்றவற்றை குளத்தின் அருகே சேற்று நிலத்தில் கண்டது பறவைகளின் வாழிடங்கள் குறித்தும் பறவைகளின் வலசை குறித்தும் எனக்குள் ஒருவிதப் புரிதலை ஏற்படுத்தின.
திரைகடல் ஓடியும் திரவியம் சேர்ப்பது மனிதர்களுக்கு ஒரிரு முறை போதும். ஆனால் வலசை வரும் பறவைகளுக்கோ அது வருடாந்திர நிகழ்வு. கோடை காலத்தில் பாலை நிலத் தலைவன் தன் குடும்பத்தின் உணவுத் தேவைக்காக தலைவியை விட்டு பிரிவதைப் போல துயர்மிக்கது. பறவைகள் தன் சொந்த நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்ய வேண்டுமென்றால் குளிர்காலத்தில் பனி உறைந்து போய் உணவின்றி இருக்கும் சமயத்தில் உணவைத் தேடி ஆயுள் முழுவதும் திரைகடல் ஓடியேத் தீர வேண்டும். தன் சொந்த நிலத்தைவிட்டுப் பிரிந்தே ஆக வேண்டும். அப்படி கடல் கடந்து நம் நாட்டிற்கு வரும் பறவைகளே வலசைப் பறவைகள். அவற்றின் முக்கிய நோக்கம் உணவுத் தேவைதானே தவிர இன விருத்தி அல்ல என்பதை இந்தப் பயணத்தின் வழிப் புரிந்து கொண்டேன். இப்படி எத்தனையோ பாடங்களை கடந்த நான்கு மாதங்களில் பறவைகள் பார்த்தல் வழியாக அறிந்திருக்கிறேன்.
பறவைகள் பற்றிய தகவல் இல்லாத இடங்களுக்குச் சென்ற எனக்கு இந்தப் பறவைகள் அளித்த தகவல்கள் ஏராளம். அது என்னுள் சிம்மாசனமிட்டிருந்த மிதப்பு மனநிலை சீட்டுக்கட்டாக சரித்துவிட்டது. திண்டுக்கல் மாவட்டப் பறவைகள் வரலாற்றை அவ்வளவு சுலபமாக என்னால் எழுதிவிட முடியாது என்று இப்போது உணர்கிறேன்.
எனினும் நான் வகுத்துக் கொண்ட எல்லைக்குள் ஒரு பயணத்தை நிறைவு செய்வதில் உள்ள ஆன்ம பலத்தைக் கண்டு வியக்கிறேன். 588 பறவைகள் பட்டியல்கள் வழியாக 197 வகையானப் பறவைகளை ஆவணப்படுத்தியுள்ளேன். இந்தப் பயணத்தின் வாயிலாக 500 மேற்பட்டத் தாவரங்களையும் ஆவணப்படுத்தியுள்ளேன். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் அயல் தாவரங்கள் எங்கெல்லாம் பரவியுள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள முக்கிய ஆவணமாக அது விளங்கும் என்றும் நம்புகிறேன்.
பிற்காலத்தில் ஒருவர் நான் வகுத்த எல்லையை இன்னும் விரிவாக்கி பெரு முயற்சி எடுத்து நிறைவு செய்யலாம். அவருக்கு இப்போதே என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெரும்பணியை நிறைவு செய்ய அனைத்து உதவிகளையும் வழங்கிய NCF நிறுவனத்திற்கும் பறவைகள் ஆய்வாளர் திரு.ப.ஜெகநாதன் அவர்களுக்கும், முனைவர். சிவா, திருச்சி அவர்களுக்கும் நன்றி சொல்ல இந்நேரத்தில் கடமைப்பட்டிருக்கிறேன்.
